மனிதப் பட்டியலில் சிங்களர்கள் இனியும் நீடிக்க வேண்டுமா
''18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்காதீர்கள்!’ - இந்த எச்சரிக்கையுடன்தான் அந்தக் காட்சி ஓடியது. ஆனால், 18 வயதைக் கடந்தவர்கள்கூட அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியமற்றுக் கடந்துபோனார்கள். 'இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்!’ என்பதை, 49 நிமிடம் 4 நொடிகள் ஓடிய அந்தக் காட்சியின் மூலமாக உலகத்தின் மடியில் போட்டு உடைத்தது 'சேனல் 4’ தொலைக்காட்சி.
போர் ஆரம்பித்தது தொடங்கி முள்ளி வாய்க்கால் வரை நீண்டு, இறுதிக் களத்தில் ரத்தமும் சதையுமாக முடிந்தது வரையிலான இன அழிப்புக்கு அதி முக்கிய சாட்சி... அந்த ஒளிபரப்பு. புலிகளின் கைகளைக் கட்டி குப்புறத் தள்ளி பின்னந் தலையில் சுடுவதும், அலறக்கூட அவகாசம் இல்லாமல் பொத்தெனச் சரியும் உடல்களைக் கண்டு கை கொட்டிச் சிரிப்பதும் சிங்களர்களின் சீரிய குணமாக உலக அரங்கில் ஒளிபரப்பாகியது. செத்துக்கிடக்கும் பெண் போராளிகளின் உறுப்புகளைக் காட்டி கொக்கரித்துச் சிரிக்கிற சிங்களக் கொடூரம் உலகத்தின் மனசாட்சியையே ஒரு கணம் தலை குனியவைத்தது.
''முழுக்கப் பார்க்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப் படுகொலை என்பதற்கு இதைவிட சாட்சி தேவை இல்லை!'' என அலறுகிறார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். ''எங்களின் அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள்போல் தெரிகிறது. இவற்றை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது!'' எனப் பதற்றத்தோடு சொல்கிறார் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட்.
''இன அழிப்பு, போர் மரபு மீறல், பெண்கள் மீதான சித்ரவதை என அத்தனை விதமான அட்டூழியங்களையும் சிங்கள ராணுவத்தினர் அரங்கேற்றி இருக்கிறார்கள். மனிதப் பட்டியலில் சிங்களர்கள் இனியும் நீடிக்க வேண்டுமா என்பதை உலகம் யோசிக்க வேண்டும்!'' என மனித உலக உரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன. ஆனால், எதற்கும் சலனமே காட்டாத சிங்கள அரசு, 'சேனல் 4 ஒளிபரப்பிய காட்சி கள் நம்பும்படியாக இல்லை. புலிகளின் வழக்கமான சித்திரிப்பு வேலைதான் இது!’ எனப் பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக அறிவித்தது.
கூடவே, அதி முக்கிய விளக்கமாக, 'சேனல் 4 இசைப்பிரியா என்பவரை ஊடகவியலாளர் என்று மட்டுமே சொல்கிறது. ஆனால், இசைப்பிரியா புலிகள் அமைப்பில் லெப்டி னென்ட் கர்னலாக இருந்தவர்!’ என்கிறது இலங்கை அரசு. இசைப்பிரியா வுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப்பற்றி வாய் திறக்கும் வல்லமை இலங்கைக்கு இல்லை.
இனப் படுகொலையின் ஆவணப்படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் கெலம் மெக்ரே, ''போர் நடந்தபோது தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டவை தனியாகவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தனியாகவும், எங்களுக்குக் கிடைத்தன. நிராயுத பாணியாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், சித்ரவதை செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் சிங்கள ராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள் எந்த வகையான செல்போனில் எடுக்கப்பட்டவை, என்ன தேதியில் எடுக்கப்பட்டவை என்பதைக்கூட எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து உண்மை என உறுதிப்படுத்திய பிறகுதான் வெளியிட் டோம். நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளை எங்களாலேயே கண்கொண்டு பார்க்க முடிய வில்லை என்பதுதான் உண்மை!'' என்கிறார் வருத்தமாக.
கொக்கரித்துச் சிரிப்பதற்கும் கூடிப் பேசி ரசிப்பதற்கும், போர்க்களத்தில் சிங்கள வீரர் களால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளே, இனப் படுகொலையின் சாட்சியாக உலகை வலம் வருவதுதான் வேதனையான வேடிக்கை.
இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரகுமார், '' 'சேனல் 4’ ஒளிபரப்பியகாட்சி கள் உலகத்தின் கவனத்தை இரக் கத்தோடு திருப்பி இருக்கின்றன.
தமிழக முதல்வராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, இலங்கை அரசின் போர்க் குற்றங் களைக் கண்டித்தும் பொருளா தாரத் தடை விதிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இருப்பது உலகளாவிய தமிழர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது. 'சேனல் 4’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொடூரங்கள் குறித்தும் தமிழக முதல்வர் உலக அரங்கில் கேள்வி எழுப்ப வேண்டும். 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளைக் காட்டிலும், இதயம் கனக்கச் செய்யக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்கள் எங்களிடம் நிறைய இருக்கின்றன. உடல் முழுக்க சிங்கள அரசின் கொடூரங்களைத் தாங்கியபடி தப்பித்து வந்த உயிர் சாட்சியங்கள் பலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இனச் சித்ரவதைக்கு ஆதாரமாகக் காயங்களைச் சுமந்திருக்கும் அந்த உயிர் சாட்சிகளை உலக அரங்கில் நிறுத்த நாங்கள் தயாராக இருக் கிறோம். முதுகைப் பிளந்தது, ஆணியால் எழுதியது, ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்துகளை சிகரெட் நெருப்பால் எழுதியது எனத் தழும்புகளையே சிங்கள வெறியின் சாட்சியங் களாகச் சுமந்து திரிபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன வெறிக் கொடூரங்கள் குறித்து அவர்கள் வாய் திறந்தால், இந்த உலகத்தால் தாங்க முடியுமா எனத் தெரியாது. பிரிட்டனில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ஒப்புக்கொள் கிறார்கள். 13 நாடுகளில் விரவி இருக்கும் எங்கள் அமைப்பு, அனைத்துக் கட்சிகளையும் ஒருசேர எங்களுக்கான தீர்வுக்காக வலியுறுத்தி வருகிறது.
'சுவாமி ரவிசங்கர்ஜி காட்டிய காணொளிகளைப் பார்த்த பிறகுதான், ஈழத்தில் நடக்கும் கொடூரங்கள் எனக்குத் தெரிந்தன’ என முன்பே சொன்னார் ஜெயலலிதா. உயிர் சாட்சியங்களின் குரல் களைப் பதிவு செய்து அவருக்குக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழர்களுக்கு என்று இருக்கும் ஓர் அரசு இலங்கை மீதான நடவடிக்கையை வலியுறுத்தினால், அந்த வார்த்தைகளுக்கான வல்லமை வலுவாக இருக்கும்!'' என்கிறார் எதிர்பார்ப்புடன்.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார், ''ஹிட்லர் காலத்தில் இன அழிப்பு நடந்தபோது, அதனை உரக்கச் சொல்ல ஊடக வசதி இல்லை. ஆனால், இன்றைக்கும் ஜெர்மனியில் இன அழிப்பு சம்பந்தமான புகைப்படங்களை ஆராய்ச்சி செய்து ஆவணமாக்கி வருகிறார் கள். இன வெறிக் கொடூரங்கள் உலக அரங் கில் ஒருபோதும் ஊக்குவிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தவே அத்தகைய ஆவணங் கள் தேடப்படுகின்றன.
ஆனால், இன்றைக்கு கண் முன்னரே நடந்திருக்கும் இன வெறிக் கொடூரத்தை உலகம் மிகுந்த தயக்கத்தோடு ஒப்புக்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. காரணம், இலங்கை அரசுக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளைச் செய்தன. ஆனால், இலங்கை அரசின் இன வெறிப் போக்கை, உதவிசெய்த அந்த நாடுகளால்கூட நியாயப்படுத்த முடியாது. 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சி களைக் கண்டு சர்வதேசமும் பொங்கி வெடிக்கிறது. சிங்கள அரசின் இன வெறிக் கொடூரங்கள் அம்பலமாக்கப்படும் இன்றைய சூழலிலும், அங்கே வதை முகாம்களில், பசி, பட்டினிக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவதுதான் பெரும் துயரம்.
இலங்கையின் இன வெறிப் போக்கை மறுக்க முடியாத உலக நாடுகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி னால் மட்டுமே, அங்கே நடந்த - இன்றைக்கும் நடக்கும் கொடூரங்களுக்குத் தீர்வாக இருக்கும்!'' என்கிறார் ஆதங்கமாக.
லண்டனில் வாழும் சுதா என்கிற நிர்வாகி, ''இன வெறிக் கொடூரங்களாக 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மனசாட்சிகொண்ட யாராலும் மறுக்க முடியாது. மனித உரிமை அமைப்புகளுடன் பெண் சித்ரவதைகளுக்கு எதிரான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கைகோக்க வேண்டும். தாய்த் தமிழீழ உறவுகள் கைகொடுத்திருக்கும் இந்தச் சூழலில் உலகளாவிய மீடியாக்களும் உரக்கக் குரல் எழுப்பி, உலகின் மனசாட்சியை உலுக்க வேண்டும்!'' என்கிறார் ஏக்கத்துடன்.
எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நிகழும் புரட்சி, போர் ஆகியவற்றை அதிமுக்கியத்துடன் காட்டிய ஊடகங்கள், 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மறந்தும் காண்பிக்கவில்லை. தொப்புள் கொடி உறவாகத் துடித்திருக்க வேண்டிய தமிழக சேனல்களும் மருந்துக்குக்கூட அந்தத் துயரங்களைக் காட்டவில்லை.
தமிழக சேனல்கள் போட்டி போட்டு அந்தக் காட்சிகளை வெளியிட அது ஏதாவது சாமியாரின் படுக்கை அறைப் பதிவா என்ன?
ஆண்கள், பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது தான்,
பாலுட்டவும் முடியாது தான்,
ஆனால்
அவர்களும் அம்மாக்கள் தான்...
நான் கருவுற்ற நாள் தொட்டு;
துயரங்கள் பல கண்டு;
கடைசியாய்
உயிர்வலி சுமந்து;
எனக்கு உயிர் கொடுத்து,
தொப்புள் கொடி அறுப்பதற்குள்
வாரி அணைத்து
முத்த மிட்ட என் அம்மாவுக்கு நிகர்,
அன்றும் இருந்ததில்லை,
இன்றும் இருக்கவில்லை,
என்றும் இருக்க போவதுமில்லை...
சூரியனிலிருந்து வெடித்து சிதறிய நாள் தொட்டு பூமி மாறிக் கொண்டே தான் இருக்கிறது, நாமும் கூட தான் மாறிக் கொண்டே இருக்கிறோம், ஒவ்வொரு காலம் தொட்டும் நம் உணவு மாறியிருக்கிறது, நம் உடை மாறியிருக்கிறது, ஏன் நம் உடல் அமைப்பே மாறியிருக்கிறது, ஆனால் மாறாத ஒன்று உண்டு, அது காதலிப்பது, அன்று காதலித்தோம், இன்று காதலிக்கிறோம் நாளையும் காதலிப்போம்....
கடவுள் இல்லாது போனாலும் கவலையில்லை ஆனால் காதல் இல்லாது போனால், காதல் தொலைத்து பின் எதை வாங்க? காதல் மட்டும் இல்லாது போனால் களவி ஏது , கவிதை ஏது, கலை ஏது??? இப்படி காதலின் அருமை எனக்கே புரிகிறதுயென்றால் சங்க தமிழனுக்கு என்ன தெரியாதா? வீரம் ஒரு கண் என்றால் காதல் மரு கண் அவனுக்கு, ஆதலால் தான் ஒன்றல்ல இரண்டல்ல 401 காதல் கவிதைகள் தொகுத்திருக்கிறான் குறுந்தொகை எனும் பெயர் கொண்டு, இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு சங்க கால குறுந்தொகை காதல் கவிதையையும் அதன் எளிய உரையோடும் முடிந்தால் என்னுரையோடும் பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன், இது என் சிறு முயற்சி, காதலுக்காகவும் காதலர்களுக்காகவும்...இனி காதல், காதல், காதல் மட்டுமே....
என்றும் காதலுக்காக,
காதலுடன்,
தோழன் மோகன்...
முதல் பாடல்:
குறிஞ்சி – தலைவன் கூற்று
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது, கண்டது மொழிமோ;
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே.
- இறையனார்
எளிய உரை:
நீயே சொல் வண்டே…
பார்த்துப் பார்த்து தேன் தேடி வாழும்
அழகிய இறக்கை வண்டே
எனக்காகப் பொய் சொல்லாமல்
பார்த்ததைச் சொல்,
மயில் போன்றவள், அழகான பற்களுடைய
அந்தப் பெண்ணின் கூந்தலைவிட
அதிக வாசனையுள்ள பூ உள்ளதா சொல்…
என்னுரை:
இந்தப் பாடல்தான் இறையனார் எழுதிக்குடுக்க தருமி வாங்கீட்டுப் போய் வம்புல மாட்டிக்கிட்டது.இந்த பாடல் படி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மனம் உண்டு, ஆனால் நக்கீரரின் வாதப்படி, பூக்கள் சூடுவதாலோ வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதாலோ தான், பெண்களின் கூந்தலுக்கு மனம் உண்டு... எது எப்படியோ இது ஓர் அருமையான காதல் கவிதை, இருந்தாலும் எனக்கு இறையனார் சொல்வது தான் சரியெனபடுகிறது... உங்களுக்கு???
அம்மா, அப்பா
நீங்கள்
இந்துவோ?
கிறிஸ்துவரோ?
இஸ்லாமியரோ?
எனக்கு பிரச்சனையில்லை
நான்
ஒரு குழந்தை
குழந்தை மட்டுமே....
உலகத்தீரே!
ஓர் உண்மைச் சொல்லுங்கள், உங்கள் மனதில் முதன் முதலாய் தோன்றிய கடவுள் நம்பிக்கை பயமுறுத்தி வந்ததா? பழக்கத்தால் வந்ததா? இரண்டில் ஒன்று தான் நிச்சிய காரணம், ஏன்? என்றால் இந்தியாவில் எந்த மூலையில் பிறந்தாலும் அந்த குழந்தையோடு அதன் சாதியும், மதமும் சேர்த்தே பச்சை குத்தப் படுகிறது.
குழந்தைகள் கண்திறக்கும் போதே, அது ஆண்டவன்யிட்ட பிச்சை அல்லது அருள் என்று ஆரம்பிக்கிறோம் நம் மூலை சலவையை, நா கூசமால் நாம், பத்து மாதம் பாடாய் பாடு பட்டு, உயிர் வலி அனுபவித்து, உதிரம் சிந்தி பெற்று எடுத்த அந்த அன்னையை வைத்துக் கொண்டே ஆண்டவன் அருள் என்று பிதற்றுகிறோம், நாம் நம்பினால் மட்டுமே குழந்தை பிறப்பு என்பது கடவுள் அருள் ஆனால் அந்த அன்னை அனுபவித்த வலியும், அவர் சிந்திய ரத்தமும் தான் எதார்த்தம், நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், ஆனால் நாம் எப்போதுமே நம் குழந்தைகளுக்கு எதார்த்தங்களை தருவதில்லை, நமது நம்பிக்கைகளையும், கற்பனைகளையுமே திணிக்கிறோம் அதனால் தான் பெற்ற தாயையே எட்டி உதைத்து முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் பக்திமான்களை உருவாக்கியிருக்கிறோம்,
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்... நான் உன்னை பெற்று எடுத்ததால், இது தான் உன் மதம், இது தான் உன் கடவுள், இது தான் உன் புனித நூல் என்று குழந்தைகளின் மூலையில் திணிப்பது கண்டிப்பாய் உரிமை மீறல் தானே? குழந்தைகள் என்றால் அவர்களுக்கு சுயம் இல்லையா என்ன? நாம் உயிர் கொடுத்தோம் என்பதற்காக அவர்களுக்கு உரிமையில்லை என்று ஆகிவிடுமா?
அப்படினா எதுவுமே சொல்ல வேண்டாமா? அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியாதே, நாம் தானே கற்றுக் கொடுக்க வேண்டும், அது நம் கடமை என்ற உங்கள் ஆதங்கம் சரிதான்...
ஆனால் என் கேள்வி அதற்கு மதமோ? கடவுளோ? தேவையா என்பதே?
நிதானமாய் வாசித்து பாருங்கள் கீழே உள்ள வழிமுறைகளை,
திருடினால் கடவுள் கண்ணை குத்திடும்.
மற்றவர்களுக்கு தீங்கு செய்தால் நரகத்தில் எண்ணெய் கொப்பரையில் போட்டு வதுக்குவார்கள்
இவைகள் சாதரணமாய் நம் குழந்தைகளை நல்வழிபடுத்த நாம் பயன்படுத்துவது...
இவைகளையே கீழ் வருவது போல கற்றுக்கொடுக்கலாம் இல்லையா?
குட்டி பாப்பா, அந்த மழையை பார், எப்போதுமே எல்லோரையும் சமமாக, ஏற்ற தாழ்வுயில்லாமல் அன்பு மழை பொழிகிறதே அது போல் நீயும் எல்லோரையும் சமமாக பார்!
செல்லம் அதோ பார், அந்த மரத்தை எப்படி தான் வெயிலிலோ மழையிலிலோ நனைந்தாலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு குடையாய் நிற்கிறது அது போல் நீயும் எல்லோருக்கும் உதவுணும்.
கன்னுக்குட்டி! இந்த பந்தை பார், இத எவ்வளவு வேகத்தில் நான் எறியிறேனோ அதே வேகத்தில் சவரில் பட்டு திரும்பி வரும், அது போல் தான் நீ நல்லது பண்ணினால் நல்லது திரும்பி வரும், கெட்டது பண்ணினால் கெட்டது திரும்பி வரும்.
இந்த இரண்டு வழிமுறைகளில் எதை தேர்வு செய்வது என்பது ஒவ்வொரு பெற்றோரின் விருப்பம்,
என் கேள்வி...
பட்டாம்பூச்சி பிடித்து விளையாடும் அந்த பிஞ்சு கைகளில் பைபிள் திணிப்பதோ?
நீ மற்றவர்களை காட்டிலும் உயர்ந்த சாதியில் பிறந்தவன் என்று உணர்த்தும் படி அந்த கல்லம் கபடம் அற்ற குழந்தையின் தோள்களில் பூநூல் போடுவதோ?
ஏன்? எதற்கு? என்று சொல்லாமல் வம்பிடியாய் குழந்தையின் தலையில் தொப்பி மாட்டிவிடுவதோ? எந்த வகையில் சரி? இது எப்படி அறிவுசார் செயலாக முடியும்?
இவைகள் போல் தொடர்ந்து நாம் குழந்தைகள் மீது திணிபதற்கு காரணம், "என்னால் உருவானவர்கள் தானே, என் நம்பிக்கைகளை, என் கற்பனைகளை, என் கனவுகளை, எனது பொதுபுத்திகளை என் குழந்தைகள் மீது திணிப்பதும் அவர்கள் அதை சுமப்பதும் என்ன தவறு? அதை கேட்க நீ யார்?" என்று வாதிட்டால் ஒரு கேள்வி நண்பர்களே...
இந்த மனப்பான்மை அன்பினாலா? ஆதிக்கத்தினாலா?
அன்பு தான் ஆனால் ஆதிக்கம் கலந்த அன்பு என்று நீங்கள் சப்பை கட்டு கட்டினால், பதில் சொல்லுங்கள்
பருவம் பெற்ற நம் பிள்ளைகள் நாம் பின்பற்றிய மதத்தையோ, நம்பிக்கையையோ புறகணிக்க்கூட வேன்டாம், கேள்வி கேட்டாலே ஏன் நாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறோம், நம் பிள்ளைகள் சுயமாய் சிந்திக்கிறார்கள், அவர்களுக்கு முடிவு எடுக்க சுதந்திரம் இருக்கு என்று நாம் ஏன் உணர்வதுமில்லை, அவர்களை விடுவதுமில்லை?
எப்பா! சாமி!!! என்ன பெத்தவங்க இப்படி தான் வளத்தாங்க, நானும் இப்படி தான் வளர்ப்பேன், உலகத்தில எல்லோரும் இப்படி தான் வளக்குறாங்க, இது தான் சரி என்று என்னிடம் வேதம் ஓதாதீர்கள் நான் தெளிவாகவே இருக்கிறேன்.
என் குழந்தை மீது நான் உறுதியாய் எதையும் திணிக்க மாட்டேன், எந்த சாயமும் அவர்கள் மீது நான் பூசப் போவதுயில்லை, என் குழந்தை ஓர் குழந்தையாக மட்டுமே வளரும்.
அதோ!!! என் குழந்தை வளர்ந்து பணி செய்து கொண்டுயிருக்கிறாள் அவள் கழுத்தில் ஏதோ கயிறு இருக்கிறது, ஒரு வேளை அதில் ஏசுவோ, அல்லாவோ, பிள்ளையாரோ தொங்கி கொண்டுயிருக்கலாம் அல்லது வெறும் கருப்பு கயிறாகவும் இருக்கலாம், எதுவாயினும் அது அவள் அவளுக்காக அவளே தேர்வு செய்துக் கொண்டது! நான் திணித்தது அல்ல!!!
வாருங்கள் தோழியர்களே, தோழர்களே புதியதோர் உலகம் குழந்தைகளுக்காக உருவாக்குவோம், அதில் குழந்தைகள் குழந்தைகளாக மட்டுமே இருக்கட்டும்...
என்றும் நம்பிக்கைகளுடன்,
குழந்தை மூலைசலவையின் எதிர்பாளன், தோழன் மோகன்
பின் குறிப்பு:
இது ஒரு முன்னுரையே நிறைய விவாதிக்க, எழுத வேண்டியிருக்கிறது, வலைபதிவுகளில் இருக்கும் அம்மாக்களும், அப்பாக்களும் இந்த பார்வை பற்றி கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.
முன் குறிப்பு:
இதோ, இந்த வார இளம் எழுத்தாளர் தோழர் சரவணகுமார், தோழர் எனது ஆருயிர் நண்பர், மனிதம் போற்றும் பண்பாளர், செக்கு மாட்டு சிந்தனைகளில் சிக்காத சிந்தனையாளர், இதுவரை பேச்சாலும், செயலாலும் மட்டும் தன் சக மனிதர்களை சிந்திக்க செய்த தோழர் முதல் முறையாக பேனா பிடித்திருக்கிறார், அதற்கு தளம் அமைத்து கொடுத்ததற்கு பெருமை கொள்கிறேன். தோழர் தொடர்ந்து தன் எழுத்தானி கொண்டு சிந்தினை பரப்ப வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டு பதிவுலகத்திற்கு அறிமுகம் செய்கிறேன், பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!
எந்திரனும் கழிவறைகளும்!!!
உழக தமிழர்களின் உயிர்துடிப்பாம் "எந்திரன் - தி ரோபட்" அக்டோபர் முதல் நாள் உலகெங்கிலும் அதன் வெற்றி பயணத்தை தொடங்கயிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 160 கோடி ரூபாய் செலவில் உலக தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட இந்த படத்தை தயாரித்துள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் கோலாகலமாக நடத்தபட்டது, இதில் களந்து கொள்வதற்காக பெரும்பாலான தமிழ்திரையுலக நட்சத்திரங்கள் வானில் மின்னிக் கொண்டே ஆகாய மார்க்கமாக மலேசியாவிற்கு பயனித்தன. இதற்கான செலவு எவ்வளவு என்பது தெளிவாக தெரியவில்லை, சுமார் 500 பேர் விமான பயணம், தங்கும் வசதிகள், நிகழ்ச்சி செலவு ஆக மொத்தம் சுமார் 5 கோடி ரூபாய் செலவாகியிருக்கும், இது போல் இந்த தனி சிறப்புவாய்ந்த படத்திற்கு எத்தனை விளம்பரங்கள், நிகழ்வுகள் மற்றும் செய்திகள் ஏற்படுத்தபட்டுள்ளன என்பதை பட்டியல் போடவே முடியாது. இருந்தாலும் இதோ சில,
மூன்று நாட்கள் இசை வெளியீடு தொகுப்பு விழா சன் தொலைகாட்சியில்
மீண்டும் எப்படி தொகுத்தோம் என்று ஓர் மறு ஒளிபரப்பு
பட டிரெயிலர் வெளியீட்டு விழா
குமரி முதல் சென்னை வரை "எந்திரன் ரத உலா"
முன்பதிவு செய்திகள், அதனுடன் தொடர்பு உடைய நிகழ்வுகள்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...
நன்பர்களே இணையத்திலிருந்து தெரிந்து கொண்ட தகவலின் படி சுமார் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகெங்கிலும்.திரையிடப்படுகிறதாம் எந்திரன்.
இணையத்தில் ஒரு கணக்கு அடித்து சொல்கிறது முதல் மூன்று நாட்களுக்கு உள்ளாகவே சுமார் 500 கோடி ரூபாய் வசூலாகிவிடும் என்று, முதல் வாரத்தில் மட்டும் மொத்த வசூல் சுமார் 1600 கோடியை தொட்டுவிடுமாம், சென்னையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறதாம்.
ரூபாய் 160 கோடி முதலீடு இட்ட படத்திற்கு முதல் வாரத்தில் மட்டும் 1600 கோடி வருமானம் என்றால் இது எல்லாம் யாருடைய பணம், தயாரிப்புக்கு பயன் படுத்தபட்ட 160கோடியை சேர்த்தும் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து தானே சம்பாதிக்கபட்டது.
இந்த 160 கோடியும் வெளிநாடுகளில் விதைக்கபட்டு படமாக்கபட்டுயிருக்கிறது ஆனால் இது தமிழ்நாட்டில் மட்டும் அறுவடை செய்யப்போகும் வருமானம் மூதலீட்டை காட்டிலும் பத்து மடங்கு, இது மட்டுமல்ல "எந்திரன்" என்ற தமிழ்பெயருக்காய் 10 ஆயிரம் வரிச்சலுகையும் பெறுவார்கள்.
இந்த 1600 கோடி ரூபாயும் ஒருவரிடமிருந்து பெறப்போவதுயில்லை, நம் ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்படயிருக்கிறது, அது அனைத்தும் நம் பணம்.
இது ஒருபக்கம் இருக்கட்டும் நான் உங்களிடம் மற்றும் சில தகவல்களை பரிமாறி கொள்ள விரும்புகிறேன்.
நாம் அனைவரும் வசிக்கும் இந்தியா உலக சுகாதர தரவரிசையில் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் தெரியுமா? அது மட்டும் அல்ல சமீபத்திய ஓர் ஆய்வின் படி ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளை காட்டிலும் ஏழைகள் அதிகமாக வசிக்கும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இது மட்டும் அல்லாமல் பன்றி காய்ச்சல் போன்ற தொற்று நோய்களினால் சுமார் 110 நபர்கள் இறந்துயிருக்கிறார்கள். அவ்வளவு எதற்கு நமது ஊரில் உள்ள பள்ளிகளில் சுத்தமான, சுகாதாரமான, தேவையான அளவிற்கு கழிப்பிட வசதிகள் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
நமது நகரங்களின் சந்துகளில், சாலை ஓர மரங்களின் அருகில் சிறுநீர் கழிக்காதவர்கள் உண்டா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலானவரின் பதில்.
இந்த சுகாதார முறைகேட்டினால் .அதிகம் பாதிக்கபடுபவர்கள் பெண்கள் தான்.
நம் தமிழகத்தை பொருத்த வரையில் 4078 மேல்நிலை பள்ளிகள் உள்ளன, இதில் இருபாலர் பயிலும் பள்ளிகள் 3001, இதில் எத்தனை பள்ளிகளில் சுத்தமான கழிவ றைகள் உள்ளன.
பெரும்பாலும் கிராமபுற பள்ளிகளில் திறந்த வெளி கழிப்பிடம் தான்
இங்கு படிக்கும் பெண்கள் குறிப்பாக மேல்நிலை பள்ளியில் படிப்பவர்களுக்கு இயற்கையாக வரும் சில பிரச்சனைகளால் அந்த நாட்களில் பள்ளிக்கு செல்வது இல்லை, இப்போது சில வசதிகள் இருந்தும் கூட அவர்கள் உடை மாற்றி கொள்வதற்கும், ஓய்வெடுத்து கொள்வதற்கும் தனி அ றைகள் ஏதும் இல்லை,
இது ஒரு புறம் இருக்க, பேருந்துகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பெண்களின் நிலை ஆண்களின் நிலையை விட மிகவும் மோசம். ஊருக்கு வெளியில் இயற்கை உபாதைகளுக்காக பேருந்து நிருத்தப்படும், அங்கு எந்த வித பாதுகாப்பு வசதியும் இருக்காது, இது மட்டும் அல்லாமல் சூரியன் வருவதற்கு முன்பாகவே எல்லாத்தையும் முடித்து விட வேண்டிய கட்டாயத்தில் தான் இன்றும் நிறைய சகோதிரிகள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில்.
இப்படி சரிவர கழிவுகள் வெளியேராத காரணத்தினால் இந்திய பெண்களுக்கு விரைவாக சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது என்பது நாம் அறிய வேண்டிய உண்மை.
நமது ஊரில் உள்ள பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் திரையரங்குகளில் சுத்தமான கழிப்பிடம் இருக்கிறதா? கழிவ றை
இருக்கட்டும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறதா? இல்லை என்பது தான் ஒரே பதில்...
இப்போது மறுபடியும் எந்திரனை யோசித்து பாருங்கள், நம்மால் ஒரு 2 1//2 மணி நேரம் பொழுதுபோக்கிற்காக எடுக்க படும் படத்திற்கு ரூபாய் 1600 கோடி வருமானம் ஒரு வாரத்தில் ஈட்டி தர முடியும் என்றால், நம் வீட்டு பெண்கள், சகோதரிகள், குழந்தைகள், ஏன் நமக்காக கூட ஓர் சுத்தமான, சுகாதாரமான சூழ்நிலையை நாம் ஒன்று கூடி உருவாக்காமல் இருப்பது ஏன்?, ஏன் நாம் ஒன்று கூடி படம் மட்டும் தான் பார்க்க வேண்டுமா என்ன? கொஞ்சம் மாற்றி பார்கலாமே, நம்மால் கண்டிப்பாக ஒரு சுத்தமான சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க முடியும், குறைந்த பட்சம் எந்திரனுக்காய் அடிக்க பட்ட பெலஃஸ்(flex) பேனர்களையும் சவரோட்டிகளையும் சுகாதார கழிவறைகளின் கதவுகளாக மாற்றுவோமே?
சிந்தியுங்கள் தோழர்களே! தோள் கொடுங்கள் தோழிகளே!!!
என்றும் உங்களில் ஒருவன்,
மானுடத்தின் காதலன், உங்கள் சரவணகுமார்