Unknown
                எனக்கு பிடித்த பாவேந்தர் பாரதிதாசரின் கவிதைகள் - 1!!!

நிலா அஃறிணையா? அதுக்கு உயிரில்லையா? அது வெறும் பாலைவனம் தானா? ஆம் என்று தான் சொல்லும் அறிவியல் அது தான் உண்மையும் கூட...

இருந்தால் என்ன, பெளர்ணமி நாளில் கடற்கறை மணலில், கடல் என் கால் நனைக்க, அந்த முழுநிலவை பார்க்கும் போது எனக்கு நிலா, மங்கையின் முகமாக தான் தெரிகிறது, கடற்கரையில் அத்தனை பேர் இருந்தும் என் உதடு குவித்து அவளுக்கு (நிலாவுக்கு) முத்தம் குடுக்கிறேன், எனக்கு சிறகில்லையென்பதால் தானே அவளை நெஞ்சார தழுவிக்கொள்ள முடியவில்லை என்று ஆதங்கபடுகிறேன், சரி அவளாவது நான் படும் காதல் துயர் கண்டு அவள் ஊடல் விடுத்து வானம்விட்டு இறங்கி வரக்கூடாதா? என்று வருத்தபடுகிறேன், சில நேரங்களில் மண்டியிட்டு என் இரு கை விரித்து அவளை நோக்கி கெஞ்சியும் பார்த்துவிட்டேன் என்ன கோபமோ? அவள் இன்று வரை தரையிறங்கி வருவதில்லை....

என்ன முட்டாள்தனமாக தெரிகிறதா? பரவாயில்லை இந்த உணர்ச்சியை பொருத்தவரை நான் ஒன்றும் தனி மனிதனல்ல, எனக்கு தெரிந்து எல்லா கவிஞ்கர்களுமே நிலாவை பாடியிருக்கிறார்கள், மோகம் கொண்டுயிருக்கிறார்கள், பைத்தியமாக காதலித்திருக்கிறார்கள், ஏன் பாரதிதாசன் கூட இதில் அடக்கம் தான், வியப்பாக இருக்கிறதா, இதோ அவரின் கவிதை கிழே, நீங்களே முடிவுசெய்யுங்கள்...



"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து

நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி-முகத்தைக்

கோலமுழுதும் காட்டி விட்டால் காதற்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்

சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!

சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!

காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்

கனல்மாரிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!



அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்!

அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்;

பிந்தியந்தக் காரிருள் தான் சிரித்த்துண்டோ?

பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்!

சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி

இந்தாவென்றே இயற்கை அன்னை வானில்

எழில் வாழ்வைச் சித்தரித்த வண்ணந்தானோ!



உனைக்கானும் போதினிலே என் னுளத்தில்

ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு

நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை

நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்

தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்

சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்

கனித்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!



உன்னை என திருவிழியாற் காணுகின்றேன்;

ஒளிபெறுகின்றேன்; இருளை ஒதுக்கு கின்றேன்;

இன்னலெலாம் தவிர்க்கின்றேன்; களிகொள் கின்றேன்;

எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்!

அன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவுமுற்றி

ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்!

இன்பமெனும் பால்நுரையே! குளிர் விளக்கே!

எனை இழந்தேன், உன்னெழிலில் கலந்த்தாலே!!!
"

சரி! சரி! அப்படியே சிலையாகி விடாதீர்கள், கொஞ்சம் மூச்சுவாங்குகள், அப்படியே தரையிரங்குக...முடியவில்லையா? உங்களை நீங்களே கில்லி கொள்ளுங்கள் வேறுவழியில்லை, என்ன செய்ய பாவேந்தர் தமிழுக்கு எவரையும் கட்டிப்போடும் ஆற்றல் உண்டு...

எப்போதுமே விளக்க தேவையில்லை, தேன் சுவையேன்றோ, பால் வெள்ளையென்றோ? அது போல் பாரதிதாசரின் கவிதையையும் அழகேன்றோ, சுவையேன்றோ விளக்கதேவையில்லை...

நான் முதல்முறை இந்த கவிதையை வாசித்த போது அசந்து போனேன், அதிலும் "நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனித்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!" எனும் வரியில் கவி கையாண்ட உவமை அவருக்கே உரித்த ஒரு தனித்துவமான இயல்பு... ஒவ்வொரு உவமையையும், ஒவ்வொரு சொல்லும் சுவை தான், இன்பம் தான் ஆதலால் இந்த கவிதையை எப்படி எவ்வளவு ரசிப்பது என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்...

இது பாவேந்தரின் கவிக்கடலில் ஒரு துளி, இந்த துளியோடு நின்றுவிடாதீர்கள் கவிக்கடலில் குதித்து கரைந்து போங்கள் காதலினால்!!!

என்றும் பாவேந்தரின் கவிரசிகன்,

தமிழின் காதலன்,

மோகன்...
1 Response
  1. பெயரில்லா Says:

    மிக நல்ல கட்டுரை.. எழுத்தில் முதிர்ச்சி தெரிகிறது...ஆனால் //நிலா அஃறிணையா? அதுக்கு உயிரில்லையா? அது வெறும் பாலைவனம் தானா? ஆம் என்று தான் சொல்லும் அறிவியல் அது தான் உண்மையும் கூட...
    // என்பது உண்மைதான் என்றாலும் கட்டுரைக்குப் பொருந்தவில்லை...


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner